ஆசிரியை மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சகாயராஜ் – வசந்தி. சகாயராஜ் தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . வசந்தி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார் . இவர்களது வீட்டில் 2 தளங்கள் உள்ளது . மேல்தளத்தில் ஆசிரியை சார்லட் என்பவர் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் ஆசிரியை வசந்தி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் .இன்று காலை அதிகாலை 2 மணி அளவில் மாடி வழியாக 5 மர்ம நபர்கள் ஏறி குதித்து ஆசிரியை சார்லட் வீட்டின் கதவை தட்டி உள்ளனர்.கதவை தட்டும் சத்தத்தை கேட்டு சார்லட் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை உடனடியாக கீழ்தளத்தில் உள்ள வசந்திக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்த வசந்தி தனது கணவருடன் மேல் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஐந்து பேரும் சகாயராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த ஆசிரியை வசந்தியையும் தாக்கியுள்ளனர். பின்னர் முகமூடி கொள்ளையர்கள் கணவன்- மனைவி இருவரின் கழுத்திலும் கத்தியை வைத்து அவர்களது வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு சகாயராஜின் தந்தை அங்கு வந்துள்ளார். அவரையும் அந்த கும்பல் கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். பின்னர் பீரோ சாவி எங்கு உள்ளது என கேட்டுள்ளனர்.
கத்தி முனையில் வசந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருக்கு பயந்து பீரோ சாவி இருக்குமிடத்தை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்கள் பீரோவைத் திறந்து அதில் உள்ள 50 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.பதறிய ஆசிரியையின் குடும்பத்தினர் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர் . அவர்கள் விரைந்து சென்று கதவை திறந்துள்ளனர். பின்னர் சகாயராஜ் தனது மனைவியுடன் காவல் நிலையம் சென்று புகார் செய்தார்.
அந்த புகார் மனுவில் முகமூடி அணிந்திருந்த ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் அதில் ஒருவர் மட்டும் ஹிந்தி பேசியதாகவும் மற்றவர்கள் எல்லாம் தமிழில் பேசியதாகவும் தெரிவித்திருந்தார் . இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . விழுப்புரத்திலிருந்து சாய் ராம் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரம் ஓடி பின்னர் நின்றுவிட்டது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர்களைப் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.