மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வடுகபட்டியில் பெருமாள் பாண்டியன் (50), உமா மீனாட்சி (46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுந்தர சுகீர்தன் (22) இளைய மகன் பிரணவ் கௌதம்(14) இவர்கள் இருவரும் வடகம் பட்டியில் இருக்கும் தங்களது பாட்டி வீட்டில் தங்கி இருக்கின்றனர். பெருமாள் பாண்டியன் லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு அரசு மருத்துவர் ஒருவரை வழக்கு ஒன்றில் இருந்து காப்பாற்றுவதாக கூறி லஞ்சம் பெற்றதால் பெருமாள் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால் அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இவ்வழக்கு சென்ற 14 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தது. பாண்டியன் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். நேற்று காலை அவர்களது மூத்த மகன் சுந்தர சுகிர்தன் கணினி வகுப்பிற்கு சென்று மதியம் வீடு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது வீடு பூட்டு போட்டு இருந்தது. தங்களது பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்தார். ஆனால் அவர்கள் அந்த அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை.
இதனால் அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்தை கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது பெருமாள் பாண்டியன் தூக்கில் தொங்கிய படி இருந்தது அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக அவரது மனைவியும் உளியால் தலையில் வெட்டப்பட்டு, கத்தியால் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த மூத்த மகன் சுந்தர சுகீர்தன் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார்.
மேலும் இது தொடர்பாக செல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு உடனடியாக வந்த காவல்துறையினர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையின் போது பெருமாள் பாண்டியனுக்கு லஞ்ச வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கப்பட்டதால் கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் எதிர்பாராது நேற்று காலை வீட்டில் இருந்த இருவரும் சண்டை போட்டுள்ளனர். சண்டை முத்தி ஆத்திரம் கொண்ட பெருமாள் பாண்டியன், தன் மனைவியை உளியால் தலையில் வெட்டி, கழுத்தை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். அதன் பின் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.