மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரையை ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை எனவும், இதற்காக தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த பணியை துரிதப்படுத்த வேண்டுமென ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. தமிழக அரசினுடைய மூத்த வழக்கறிஞர் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிலம் கொடுப்பதில் ஏன் கால தாமதம் என்ற கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை மாலையில் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் செல்லபாண்டியன் ஆஜராகி, தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலப்பரப்பை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டது என்றும், அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதை கேட்டு ஆச்சரியமடைந்த நீதிபதிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தமிழக அரசு நிலம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு முழுமையாக ஒப்படைத்து விட்டது என்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தவறான தகவலை ஏன் கூறினார் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனை அடுத்து மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விக்டோரியா கௌரி தமிழக அரசு முழுமையாக இடத்தை ஒப்படைக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள் விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் கூறி வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.