விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட 1600பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் குளிர் தாங்காமல் விவசாயிகள் பலரும் உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் பிற அமைப்புகளும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக இன்று தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மு க ஸ்டாலின் உள்ளிட்ட 1 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கனிமொழி, ஆர் பாலு, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகிய அனைத்து தலைவர்கள் மீதும் சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.