மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பம் இல்லையா ? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஊடகங்களில் செய்திகள் வெளியானதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடம் 8 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று இருக்கவேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பமில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இடம் கையகப்படுத்துவதில் பிரச்சனை உள்ளதாகவும், இவ்வழக்கு தொடர்பாக தலைமை வழக்கறிர் ஆஜராக உள்ளதால் வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எய்ம்ஸ் மருத்துவமனை நிலத்தை தமிழக அரசு தந்து விட்டதாகவும், மத்திய அரசு அதிகாரிகள்தான் அதனை கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் மற்றும் அரசு வழக்கறிஞரின் இந்த மாறுபட்ட பதில்களால் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.