பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.
கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா, கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்களுடைய சமூக வலைதளமான ட்விட்டரில் புகைப்படங்களை மாற்றியுள்ளனர். பா.ஜ.கவினர் சிலையை உடைத்ததாக, சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகர் புகைப்படத்தை தங்களுடைய அடையாள புகைப்படமாக திரிணாமுல் காங்கிரசார் வைத்துள்ளனர். பா.ஜ.கவிற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் இந்த புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தெரிக் ஒ பிரையன் ஆகிய 3 புகைப்படம் சமூக வலைதளமான ட்விட்டரில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே பா.ஜ.கவை கண்டித்து போராட்டம் நடத்தவும் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.