Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கார் டயர்… “பள்ளத்தில் கேட்ட அலறல் சத்தம்”… சாத்தான்குளம் அருகே நேர்ந்த சோகம்..!!

சாத்தான்குளம் அருகே கார் டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ்.  இவரது மகன் 21 வயது உடைய பால விக்னேஷ். இவரது நண்பர்கள் கார்த்திக்(21), ஜானகிராமன்(18),மற்றும்  பார்வதி முத்து(20). இவர்கள் நான்கு பேரும் குரும்பூரில் இருந்து நேற்று இரவு சாத்தான்குளத்திற்கு ஒரு காரில் வந்துள்ளனர். தனது நண்பர் ஒருவரை சாத்தான்குளத்தில் இறக்கி விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் மீண்டும் குரும்பூருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சாத்தான்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் டயர் வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம்  உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது . இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற பால விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கி அலறிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில் அந்த வழியாக வயலுக்கு சென்றவர்கள்  அலறல் சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

மேலும்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக், ஜானகிராமன், பார்வதி முத்து ஆகிய மூவரையும் சாத்தான்குளம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக மூன்று பேரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பால விக்னேஷ்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |