கிருஷ்ணகிரியில் பைக்கில் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜப்பா- வள்ளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர் . ராஜப்பா புதினா வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை ராஜப்பா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜப்பா இருசக்கர வாகனத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். உடனடியாக மர்ம கும்பல் திடீரென மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவியது . இதில் கண் எரிச்சல் அடைந்த அவர் கூச்சல் போட்டபடி மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் மர்ம கும்பல் அவரை விடாமல் விரட்டிச் சென்று கத்தியால் குத்தினர். இதில் ராஜப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராஜப்பா இறந்ததை உறுதி செய்த பின்னரே மர்ம கும்பல் அங்கிருந்து சென்றது . இந்த கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராஜப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி ராஜப்பாவின் உடலுக்கு அருகே கிடந்தது.
அந்த கத்தி காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் ராஜப்பா நில தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது .தொட்டூர் கிராமத்தில் ராஜப்பாவுக்கு சொந்தமாக நிலம் இருந்துள்ளது. இது தொடர்பாக பக்கத்து நிலத்தை சேர்ந்த சிலருக்கும் ராஜப்பாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர் .