சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக கட்டுப்பாட்டுடன் மது அருந்துபவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி வந்தார்கள். சிலர் இதை நம்பியும் வந்தார்கள். இதுகுறித்து ஒரு நிறுவனம் ஆய்வு செய்தது. உலகமெங்கும் உள்ள முக்கியமான 195 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆண், பெண் இருபாலருமாக 7 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள்.
இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையிலேயே இருந்தது. மது அருந்துகிறவர்களுக்கு புற்றுநோய் மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் என்பதையே அந்த ஆய்வுகள் புரிய வைத்தது. ஒரு துளி மதுவாக இருப்பினும், ஒரு கோப்பை மதுவாக இருப்பினும் அதன் தீய விளைவுகள் ஒன்றுதான். சம்பந்தப்பட்டவரின் மரபியல் காரணிகள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றின் காரணமாக பாதிப்பின் விகிதத்தில் மாறுபாடு ஏற்படலாமே தவிர, பாதிப்பே ஏற்படாது என்று கூறமுடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒயின் வகை மதுபானம், திராட்சைப் பழங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுபவை என்பதால் அதனால் ஒன்றும் தீங்கில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. திராட்சையில் இருக்கும் ‘ஆன்ட்டி ஆக்சிடென்டுகள்‘ உடலுக்கு நன்மை செய்யும் என்ற கோணத்தில் மது ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை பரவி இருக்கிறது. அதில் உண்மையில்லை. அதற்கு பதிலாக நேரடியாகவே திராட்சையை உண்டு வந்தால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும். மதுவால் ஏற்படும் பாதிப்புகளும் நம்மை அண்டாது என்று பரிந்துரைத்திருக்கிறது ஆய்வில் ஈடுபட்ட அமைப்பு.
மது வீட்டுக்கும், நாட்டுக்கும் எப்போதும் கேடுதான். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.