மேற்கு வங்காளத்தில் என்னை ‘வெளிநபர்’ என்று கூறும் போது மம்தா டெல்லிக்கு வரும்போது அவரை வெளிநபர் என்று சொல்லலாமா? என்று அமித் ஷா கேட்டுள்ளார்.
பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும், மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையில் அடிக்கடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது. வெளிநபரான அமித் ஷா மேற்கு வங்காளத்துக்குள் நுழைந்து மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார்” என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார்.
இந்நிலையில், கொல்கத்தா நகரில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் அமித் ஷா பங்கேற்று அதற்கு பதில் அளித்த போது, “நான் ஒரு பாஜக தேசிய கட்சியின் தலைவர் என்பதால் பிரசாரம் செய்வதற்கு இங்கு வந்துள்ளேன். இந்தியாவின் ஒரு அங்கமான மேற்கு வங்காளத்துக்கு நான் பிரச்சாரம் செய்ய வரும்போது என்னை ‘வெளிநபர்’ என்று சொல்கிறார்கள். இது என்ன பேச்சு அப்படியே இருந்தாலும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மும்பைக்கோ அல்லது பெங்களூருவுக்கோ செல்லும் போது அவரை ‘வெளிநபர்’ என்று சொல்லலாமா? மம்தா பானர்ஜி டெல்லிக்கு செல்லும்போது அவரையும் நாம் ‘வெளிநபர்’ என்று சொல்லலாமா?
மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், ஒரு வங்காளியைத்தான் முதல்-மந்திரி ஆக்குவோமே தவிர நானோ அல்லது இந்த மாநில பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவோ முதல்-மந்திரி ஆக மாட்டோம். நான் கொல்கத்தாவில் வாகன பேரணியின் போது தாக்கப்பட்டேன். இந்த தாக்குதலை சில ஊடகங்கள், நாங்கள்தான் (பாஜக) மோதலுக்கு காரணம் என்பது போல செய்தி வெளியிட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் நாங்கள் வாகன அணிவகுப்பு செய்யும் போது தாக்கினர். ஆனால், இதனை வேறுமாதிரி திசைதிருப்ப பார்க்கிறார்கள் என்று அமித்ஷா கூறினார்.