Categories
அரசியல் மாநில செய்திகள்

வாழ்வா ? சாவா ? உடன் பிறப்புக்களே…! ‘நாம்’ என மாறுங்கள்…! ஸ்டாலின் வேண்டுகோள் ..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “மிஷன்-200 என்ற இலக்கை நோக்கி டிசம்பர் 23 முதல் கழகத்தினர் பிரச்சாரத்தைத் துவங்கிட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஸ்டாலின் பேசும் போது, “மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த அரங்கத்தில் 1,659 பேர் கூடியிருக்கிறீர்கள். உங்கள் கையில் தான் 234 தொகுதிகளும் அடங்கி இருக்கிறது. அதனால் தான் இதை மிக மிக முக்கியமான பொதுக்கூட்டம் என்றேன்.

234 தொகுதிகளின் வெற்றி உங்கள் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சொல்வதற்காகத்தான் உங்களை நான் இன்று இங்கு அழைத்திருக்கிறேன்! நம்மைத் தாண்டி நமக்கு இரண்டு பலம் இருக்கிறது. அதுதான் பேரறிஞர் அண்ணா! முத்தமிழறிஞர் கலைஞர்! அவர்கள் இருவரும் நம்மை எல்லாம் நமக்குள்ளே இருந்து உணர்வால், ரத்தத்தால் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாக விளங்கக் கூடிய மாவட்டக் கழக – ஒன்றியக் கழக – நகரக் கழக – பகுதிக் கழக – பேரூர்க் கழகச் செயலாளர்களும் – சட்டமன்ற உறுப்பினர்களும் – நாடாளுமன்றக் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள இந்தக் கூட்டத்தின் மூலமாக நான் சொல்ல விரும்புவது, “அடுத்து அமையப் போவது நமது ஆட்சி தான்! நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும்! நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும்! நம்மால்தான் தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை – சாதனைகளைப் படைத்திட முடியும்! அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்!”

பொதுக்குழுவாக இருந்தாலும், செயற்குழுவாக இருந்தாலும், மாவட்டக் கழகச் செயலாளர் கூட்டமாக இருந்தாலும் ஒரு கருத்தை நான் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறேன்; “நாம் தான் வெற்றி பெறுவோம்! ஆனால் அந்த வெற்றியை சாதாரணமாக அடைந்துவிட முடியாது” என்று சொல்லி வருகிறேன். மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடாது என்பதைப் போல, நாம் சாதாரணமாக வென்றுவிட முடியாது. அதற்கான உழைப்பை, அதற்கான செயலை, அதற்கான பிரச்சாரத்தை – நாம் எந்தளவுக்கு முடுக்கிவிடுகிறோமோ, அந்தளவுக்கு நம்முடைய வெற்றியை முழுமையாக அடைவோம்!

உங்களது உழைப்பை முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிக் கொடுத்தால் மட்டுமே முழு வெற்றியைப் பெற முடியும்! ஒரு கட்சி, ஆட்சி அமைக்க 117 இடங்கள் தான் தேவை. 117 இடத்தை மட்டுமே பெறுவதற்காக நாம் தேர்தலைச் சந்திக்கவில்லை. 117 இடங்களுக்காக நாம் கட்சி நடத்தவில்லை. அது பெருமை அல்ல. பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற 1971-ஆம் ஆண்டு தேர்தலில் – தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்திய அந்த தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஒரு பெரும் சரித்திர சாதனையை நாம் படைத்தோம். அந்த வெற்றியை நாம் அடைய வேண்டும்!

1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும்! 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும்! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி நீங்கலாக அனைத்துத் தொகுதிகளிலும் வென்றோம் அல்லவா, அந்த வெற்றியைப் பெற வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி. அதுதான் முழுமையான வெற்றி! அத்தகைய முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு என்ன வழியோ அதை நீங்கள் செய்யவேண்டும். அத்தகைய முழு வெற்றியை அடைய எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட வேண்டும்.

அதற்கு உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு பொது நோக்கம் தான் இருக்க வேண்டும். யார் வேட்பாளர்? உதயசூரியன்தான் வேட்பாளர்! யார் வேட்பாளர்? கலைஞர்தான் வேட்பாளர்! என்ற ஒற்றை எண்ணம் தான் உங்களுக்கு இருக்க வேண்டும்! 200 பேர் சட்டமன்ற உறுப்பினராவதற்கும் – 30 பேர் அமைச்சராவதற்குமான தேர்தல் அல்ல இது! அப்படி நினைத்தால் அதை மறந்துவிடுங்கள்! கழக ஆட்சி மலர வேண்டும் – அதுதான் கொள்கையாக இருக்க வேண்டும்!

உங்கள் அனைவரது எண்ணமும், இன்னாருக்கு உழைக்கிறோம், அவர்தானே எம்.எல்.ஏ., ஆகப் போகிறார், இவர்தானே அமைச்சர் ஆகப் போகிறார், நமக்கென்ன என்று நினைக்காதீர்கள்! கழகம் ஆட்சிக்கு வந்தாக வேண்டும்! கலைஞரின் கனவு நிறைவேற வேண்டும்! கலைஞரின் உடன்பிறப்புகள் நாம் என்பதை நிரூபித்தாக வேண்டும்! – அதற்காக நான் உழைக்கிறேன், என்கிற எண்ணம் உங்கள் அனைவருக்கும் வர வேண்டும்!

நான் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் நினைத்தால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வர முடியும்! ஒரு கை, ஓசையாகாது. தனிமரம் தோப்பாகாது. தனி வீடு ஊர் ஆகாது. தனி மனிதன் குடும்பம் ஆகமாட்டான்! ‘நான்’ என்பதை விடுங்கள்!

‘நாம்’ என மாறுங்கள்! நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும்! பொதுவாகச் சிலர் பேசும் போது, வாழ்வா சாவா என்பது மாதிரி என்று சொல்வார்கள். அந்த உதாரணமே தவறானது என்பது என் கருத்து! வாழ்வதற்காகத்தான் அனைவரும் முயற்சிக்கிறார்கள். வாழ்வா சாவா என்பது முயற்சிக்காதவர்கள் சொல்லும் சமாதானம். தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல் இது! என ஸ்டாலின் பேசினார்.

Categories

Tech |