இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது என மாநில கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதியளிக்கிறது. அவரின் பேரணி முடிந்த பிறகு பிரசாரத்தை நிறைவு செய்கிறது. இதிலிருந்தே தேர்தல் ஆணையம் முழுவதுமாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுவது நாட்டிற்கு மிகப்பெரிய பேராபத்து என்று அவர் கூறினார்.