கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் திடீரென புதிய வகை நோய் தொற்று உருவாகியுள்ளது. இதன்படி லேசான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட 11 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளான். இதே போன்ற பாதிப்புகளுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுவதாகவும், உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து களத்தில் இறங்கிய சுகாதார குழுவினர், நோய் பாதிப்புள்ள பகுதிகளில் முகாமிட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். நோய் தொற்றுக்கான காரணங்கள் குறித்து கண்டறியப்பட்டு வரும் சூழலில் சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவு மூலம் இந்த நோய் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் மக்கள் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஷிகெல்லா பாக்டீரியா ஆபத்தானது அல்ல எனினும், முறையான சிகிச்சை பெறாவிட்டால் நீர் இழப்பு மற்றும் சோர்வால் உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்