தனது மன்ற நிர்வாகிகள் யாரும் வேறு கட்சியில் சேர வேண்டாம் என விஜய் கூறியிருப்பது அவரின் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். அதில் நீங்கள் நினைப்பது விரைவில் நிறைவேறும், யாரும் மாற்றுக் கட்சியில் சேர வேண்டாம் என விஜய் கூறியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு எப்போது வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமலும் அரசியலில் களம் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பின் அவரின் தந்தை சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை பதிவு செய்தார். இதனையடுத்து குடும்பத்தாரின் ஒத்துழைப்பின்மை மற்றும் விஜயின் கடும் எதிர்ப்பால் கட்சி பதிவை அவர் வாபஸ் பெற்றார். இதனையடுத்து சந்திரசேகர் ஆதரவு நிர்வாகிகளை, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கிய விஜய், தொடர்ந்து புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வர இருக்கின்ற நிலையில், இரண்டு நாட்களாக சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்தும், வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவும் விஜய் பேசி வருகிறார். மேலும் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், நேற்று முன்தினம் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள், நேற்று திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அதில் கட்சி பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு நிர்வாகிகளிடம் பேசிய விஜய், இயக்க நிர்வாகிகள் யாரும் மாற்றுக் கட்சியில் சேர வேண்டாம். நீங்கள் நினைப்பதுபோல அனைத்தும் விரைவில் நடக்கும் என கூறியுள்ளார். விஜயின் நம்பிக்கை பேச்சு அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதால் அவரது ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.