தமிழக மக்களுக்கு எது பொய் எது உண்மை என்பது நன்றாக தெரியும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் கொடுப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் பொங்கல் பரிசு கொடுக்கும் பணி தொடங்க உள்ளது. ஆனால் பொங்கல் பரிசுத் தொகையை விமர்சித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் எது உண்மை, எது பொய் என்பதை மக்களுக்குப் புரியும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தேர்தல் நேரத்தில் பணமாக தருவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மக்களின் நலன் கருதியே விலையில்லா அரிசி முதல் மடிக்கணினி வரை தரப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.