திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது . இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர் . பொதுமக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் கவனித்து வந்தனர். திடீரென அங்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு கணவன் மனைவி ஆகியோர் தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தனர்.
பின்பு இதைப் பார்த்த அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து அவரிடமிருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினார். அதன்பின் அவர்களின் உடல் முழுவதும் நீரை ஊற்றி தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்பு போலீசார் அவர்களை விசாரித்தனர். அப்பொழுது அவர்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா உன்னியூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி <வயது 31>, அவரது மனைவி பிரியா< வயது 27>, 2 வயது ஆண் குழந்தை ரித்திக் என தெரிந்தது. பழனிசாமி இன்ஜினியரிங் படித்துள்ளார். பிரியா எம்.எஸ்.சி படிப்பை முடித்துள்ளார்.
பழனிசாமி படித்து முடித்தபின் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவரது அண்ணனும், தந்தையும் இறந்ததற்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் ஒரு வீட்டை கட்டி விவசாயமும் செய்து வந்துள்ளார். அவரது வீட்டிற்கு போகும் வழியில் பொதுப்பாதை என்பதால் ஊராட்சி தலைவர் ஒருவர் மற்றும் அவரது ஆட்கள் குழி தோண்டி உள்ளார்கள். இதனால் பழனிசாமி அவரது வீட்டிற்கு செல்ல முடியாமலும், அவரது நிலத்தில் விளைந்து இருக்கும் வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்கு அறுவடைக்குத் தயார் நிலையில் இருப்பதால் அவற்றை வெளியே கொண்டு வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
பழனிசாமி எதிர்த்து கேள்வி கேட்டபோது அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பழனிசாமி தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பதாலும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன் என கூறினார். இதன்படி பழனிசாமி மற்றும் பிரியாவை அவர்களது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் போலீசார் அழைத்து சென்றனர். கலெக்டர் எஸ். சிவராசு விடம் பழனிசாமி தன் வீட்டிற்குச் செல்லும் பாதையில் குழி தோண்டி ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுது முறையிட்டார்.
உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டு, இதுபோன்ற பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்யும் முயற்சிகளை இனி ஒருபோதும் எடுக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார். இதுதொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். அதன் பிறகு அவர்கள் திரும்பிச் சென்றனர். கைக்குழந்தையுடன் தம்பதியினர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.