டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல கமிஷன் ஏஜெண்டுகள் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்று 28 ஆவது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு எழுந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல கமிஷன் ஏஜெண்டுகள் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை ஏற்றத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கிய அவர், மீண்டும் விவசாயிகள் போராட்டம் குறித்து விமர்சனம் செய்துள்ளதால் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.