தமிழகத்தில் தடையை மீறி கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திருட்டு போன 863 செல்போன்களை கண்டறிந்து உரியவர்களிடம் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஒப்படைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “திருட்டுப் பொருட்களை வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் பொருட்களை வாங்குவதற்கு முன்பு அதனை விசாரித்து வாங்குங்கள். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறாமல் கொண்டாட்டங்கள் நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை பேர் வருவார்கள் என்பதை தெரிவித்த பிறகே அனுமதி தரப்படும். தடையை மீறி கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளன. அதனால் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.