விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகி 28 நாட்களே ஆன பெண் விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்த போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (23). இவர் தனது உறவினரான வைரசீமான் என்பவரை காதலித்து சென்ற 28 நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். வைரசீமான் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர். அங்கு அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு அடுத்த நாளே புதுப் பெண்ணான தன் மனைவி மகேஸ்வரியை விருதுநகரில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் அவரது வீட்டில் விட்டு சென்று விட்டார்.
அதன்பின் மகேஸ்வரி தன் கணவன் வைரசீமானை பலமுறை சந்திக்க முயற்சித்தும் முடியாமல் போனது. அவரது உறவினர்கள் கேட்ட போதும் அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். இதன்பின் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் மனு ஒன்றை மகேஸ்வரி அளித்தார். புகாரின் பெயரில் தனது மனுவை போலீசார் விசாரிக்காததால் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றிருந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலிலேயே மகேஸ்வரி விஷத்தைக் குடித்து விட்டு மாவட்ட போலீசிடம் மனுவை கொடுக்கச் சென்றார். அங்கு நுழைவு வாயிலில் இருந்த காவல்துறையினர் மகேஸ்வரி விசாரித்தனர். அப்போது அவர் தான் விஷமருந்தி உள்ளதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பதற்றமடைந்த காவலர்கள் மகேஸ்வரி தூக்கி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் மகேஸ்வரியின் மனுவை விசாரித்த காவலர்கள், அவரது கணவரின் தொலைபேசி தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் இளம்பெண் விஷம் குடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது. இதனை அடுத்து மாவட்ட காவல் நிர்வாகம் மகேஸ்வரியின் புகார் மனுவை விசாரிக்க கூறி உத்தரவிட்டுள்ளது.