உத்தரப்பிரதேச மாநிலத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் உட்பட 8 மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்தலி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் விருப்பமின்றி வலுக்கட்டாயமாக மை வைத்து ரூ. 500 கொடுத்துச் சென்றாக அக்கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கிராமத்தினர் கூறும் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.