3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகள் தினமான இன்று திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராமசபை கூட்டங்கள் திமுக சார்பில் நடந்து வருகின்றன. பல திமுக நிர்வாகிகள் “அதிமுகவை நிராகரிக்கிறோம்” எனும் பெயரில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதில் பேசிய அவர், பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை அதிமுக மீது வைத்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது என்றும் கூறினார். அதன்பின் தேசிய விவசாயிகள் தினமான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
விவசாயமே நாட்டின் முதுகெலும்பு. அவற்றை பிரதமர் மோடி காப்பாற்ற வேண்டும். எவ்வித தயக்கமும் இல்லாமல் வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.