வருகின்ற ஜனவரி மாதம் மூன்றாம் தேதி நடக்கவிருக்கும் குரூப்-1 தேர்வுக்கு திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் ஐடி உடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது.
இதனால் தேர்வாளர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க முடியாமல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோய் தொற்று அதிக அளவில் இருந்ததால் அரசு ஊரடங்கு பிறப்பித்த நிலையில் நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
கொரோனா தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் ஜனவரி 3ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் இருந்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வு ஆணையம் கூறியது. இதில் திடீரென்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஐடி உடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் முடியும் என தேர்வாணையம் கூறியிருக்கிறது.
இதனால் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் திணறி வருகின்றனர். ஆனால் ஆதார் சட்டங்களின்படி ஆதார் எண்ணை எந்த ஒரு தேர்வுக்கும் இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு இடங்களில் இதனை சுட்டிக்காட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.