சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு வருகின்ற ஜனவரி 1 ம் தேதி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் மாநகராட்சியின் இந்த அறிவிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை பயனர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள்,வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.