காரில் கருகிய நிலையில் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள விராலிப்பட்டி பாலத்தின் கீழ் புறம் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது காரின் பின் இருக்கையில் கருகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் காருக்குள் இறந்து கிடந்தவர் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் சிவானந்தம்(58) என்று தெரியவந்தது.
இவரது மனைவி ராஜு. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். சிவானந்தம் கேகே நகர் பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் கோவையில் உள்ள சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று மதியம் மதுரை நோக்கி வந்துள்ளார்.
இந்நிலையில் விராலிப்பட்டி பாலத்திற்கு கீழ்புறம் கார் சென்றது ஏன்? மற்றும் கார் எப்படி தீப்பிடித்தது? காரை ஓட்டிய சிவானந்தம் பின்னிருக்கையில் கருகிய நிலையில் எப்படி பிணமானார் என்பது தெரியவில்லை. அவர் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கொலை செய்துவிட்டு பின்னர் அவரது உடலை கார் இருக்கையில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனரா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.