புனே உணவகத்தில் பணியாளர் ஒருவர் 4 வயது சிறுவனுக்கு சர்க்கரைக்கு பதிலாக வாஷிங் சோடாவை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 வயது சிறுவன் ஒருவன் மூத்த சகோதரர் மற்றும் தாத்தாவுடன் உணவகத்திற்கு சென்றுள்ளார். மூவரும் சாப்பிட்ட பிறகு அந்த சிறுவன் சக்கரையை கேட்டுள்ளார். ஹோட்டல் ஊழியர் எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட பிறகு சிறுவன் கத்தியுள்ளார். இதைப்பார்த்த சிறுவனின் தாத்தா அதை ருசி பார்த்த போது அது வாஷிங் சோடா என்பது தெரியவந்தது.
இதன் பின்னர் தொடர்ந்து சிறுவன் வலியால் துடித்துக் கொண்டிருந்த போது, அவரது தாத்தா தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் சோடாவை ஏதாவது விலகினாரா என்று கேட்க, அதற்கு தாத்தா ஆம் என்று கூறியுள்ளார். பின்னர் என்டோஸ்கோபி சோதனை செய்து பார்த்து சிறுவன் சோடாவை விழுங்கியதால் அவரது உணவு குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதனிடையே உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 337 கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட பணியாளரை தேடி வருகின்றனர். மேலும் அவரை அடையாளம் காண உணவகத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர்.