கழிவு நீர் லாரி மோதி கீழே விழுந்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி கோகிலா. இத்தம்பதியினருக்கு 10 வயதில் அபிஷேக் என்ற மகன் உள்ளான். அபிஷேக் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பிற்பகல் வழக்கம்போல் வீட்டிற்கு அருகே அபிஷேக் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கழிவுநீர் லாரி சைக்கிளின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபிஷேக் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அபிஷேக்கின் பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரியின் ஓட்டுனர் பிரபாகரனை பிடித்து அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.