மோசடி கும்பல் ஒன்று சென்னையை சேர்ந்த நபர் ஒருவரிடம் 40 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நபர் ஜோசப். இவர் ராயல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடம் முகநூல் மூலம் ஜோசப்பிற்கு அறிமுகமாகியுள்ளார். அவர் தான், லண்டனில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதற்காக தனக்கு மருத்துவ குணம் உள்ள போலிக் எண்ணெய் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த எண்ணெய் மும்பையில் கிடைக்கிறது அதன் விலை 2 லட்சம் ரூபாய் அதற்கு கமிஷனாக இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து எலிசபெத்து கூறியதை நம்பிய ஜோசப் மும்பையிலுள்ள சுனிதா என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் குறைந்தபட்சம் 100 லிட்டர்கள் ஆர்டர் செய்து அதற்கான தொகையாக 40 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ஜோசப் உடனடியாக லண்டனில் இருக்கும் எலிசபெத்திடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எண்ணெயை பரிசோதிக்க எங்கள் நிறுவனத்தினர் வர இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து லண்டனிலிருந்து எலிசபெத் நிறுவனத்தின் நபர்கள் என்று கூறி சிலர் வந்துள்ளனர். அவர்கள் எண்ணெயை பரிசோதித்து பார்த்து உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ள எலிசபெத் அங்கு ஜோசப்பை வரவழைத்துள்ளார். மேலும் 200 லிட்டர் எண்ணெய் வாங்கிக் கொள்வதாக உறுதி கூறிவிட்டு திரும்ப புறப்பட்டு சென்றுள்ளார். இதனை ஜோசப் நம்பி சுனிதா கூறிய வங்கி கணக்கிற்கு 40 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பணத்தை அனுப்பிய பிறகு தான் எலிசபெத், சுனிதா அவரது நிறுவனத்தின் நபர்கள் அனைவரும் போலியானவர்கள் என்று ஜோசப்பிற்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர் அளித்துள்ள புகாரின் பேரில் ஜோசபின் செல்போனிற்க்கு வந்துள்ள அழைப்புகள், வாட்ஸ்அப் உரையாடல்கள் போன்றவற்றை ஆராய்ந்து ஒரு கும்பல் மோசடி செய்துள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.மேலும் நைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞர் மும்பை அந்தேரியில் வசித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நபரும் அவரது குழுவினரும் இணைந்து மும்பையில் உள்ள பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இம்மோசடியில் ஈடுபட்டுள்ள மற்ற நபர்களை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.