தென்காசி அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகள் பூங்கோதை. பூங்கோதை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்யும் போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரை காதலித்துள்ளார் . இவர்களது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது தொழிற்சாலையில் வேலை இல்லாததால் கடந்த நவம்பர் மாதத்தில் கணவன்- மனைவி இருவரும் சுரண்டையில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் இன்று பூங்கோதையின் வீடு பூட்டப்பட்டு சாவி வெளியே இருந்ததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். வீட்டினுள் பூங்கோதை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூங்கோதையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்கோதையின் இறப்பிற்கு தலைமறைவாக உள்ள பூங்கோதையின் கணவர் காரணமா அல்லது வேறு யாரும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.