முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவருடைய மகன்கள் அருண்குமார்(28), அரவிந்த்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சந்தோஷ்(22) இவர்கள் மூவரும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர் . நேற்று மாலையில் இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள அய்யா கோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த காரல் மார்க்ஸ்(30) மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ், நரேஷ் மற்றும் சதீஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த அருண்குமார், அரவிந்த், சந்தோஷ் ஆகிய மூவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அரவிந்த் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்த காரல் மார்க்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட அருண்குமாருக்கும் காரல்மார்க்ஸ்க்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. மேலும் தலைமறைவான 4 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.