விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி காங்கிரஸ் கட்சியினர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகாவிற்கு உட்பட்டு சங்கரபேரி, இளவேளங்கால் போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் வெங்காயம், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்நிலையில் பருவமழை தாமதமாக பெய்தது மட்டுமல்லாமல் பயிர்களை படைபுழு நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது.
இதனிடையே பயிர் காப்பீடு செய்து இருந்தும் 2019 மற்றும் 20 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் அய்யலுசாமி தலைமையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் இணைந்து கோவில்பட்டி சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த மனுவில் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தி இருந்தனர். மேலும் இவர்கள் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு கையில் மீனாட்சி அம்மன் படத்தை ஏந்திக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.