தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பதினொன்றாம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி இருந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது வரை மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அரையாண்டுத் தேர்வும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரத்து செய்யப்பட்டது. தனியார் பள்ளிகள் மற்றும் ஆன்லைன் மூலம் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. இந்த சூழலில் இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
மேலும் தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் வேளாண் விரிவாக்க மையகட்ட பணிகளுக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்தாண்டு ஊரடங்கு காரணமாக காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து பொதுத்தேர்வு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு நிலைமை வேறு. ஆனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.