“அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். அனைத்துக் கிராமங்களில் உள்ள அன்பிற்கினிய தமிழ் மக்களைத் தேடி ஓடிவந்து 16,500 ஊராட்சிகளிலும் கூட்டம் நடத்துகிறது திராவிட முன்னேற்றக் கழகம். கழகம் அழைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வாஞ்சை பொங்க வரவேற்பு வழங்குகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வுக்குப் பேராதரவளித்து, ஆட்சி மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்துவோம் என்று உலகறியச் சொல்கிறார்கள்.
“அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்” என்கிற தீர்மானத்திற்கு ஊராட்சிகளில் நூறு – ஆயிரமென உவகையுடன் கையெழுத்திட்டு மாநில அளவில் பல லட்சக்கணக்கில் என எண்ணிக்கையை உணர்த்துகிறார்கள். டிசம்பர் 23 அன்று 1,100 என்ற அளவில் நடந்த கிராம – வார்டு சபைக் கூட்டங்கள், 24 அன்று 1,600-க்கும் அதிகமாக நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் மக்கள் – ஆடவர், பெண்டிர், இளையோர், முதியோர் வந்து கூடுகிறார்கள். ஆட்சியின் அவலத்தைப் பற்றிக் குமுறுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள்.
முதல் இரண்டு நாட்களிலேயே இத்தனை வரவேற்பு என்றால், இன்னும் ஜனவரி 10 வரை இந்த ஊராட்சிக் கூட்டங்கள் நீடித்தால், மக்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க கூட்டணி நோக்கியே சென்றுவிடக்கூடும் என்ற அச்சம், அ.தி.மு.க ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கிறது. 200 தொகுதிகளுக்குத் துளியும் குறையாமல் வெற்றி என்பது முதல் இலக்கு. ஊழலில் திளைத்திடும் அனைத்து அமைச்சர்களில் ஒருவரும் வெற்றிபெறக்கூடாது என்பது தி.மு.கழகத்தின் இரண்டாவது இலக்கு. இரண்டும் நிறைவேறிவிடும் என்பதை உளவுத் துறையினர் கொடுத்த அறிக்கைகளும், மக்கள் காட்டும் ஆர்வமும் ஆள்வோரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அரசியல் விபத்தில் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே நாளில் உறக்கம் நிரந்தரமாகக் கலைந்துவிட்டது என ஸ்டாலின் தெரிவித்தார்.