வடசென்னையில் மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வடசென்னை பகுதிகளில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், சிபிஎஸ்எல், தமிழ்நாடு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம், மணலி பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம், மெட்ராஸ் உரத் தொழிற்சாலை ஆகிய 6 நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறி வருவதால் வடசென்னை பகுதிகளில் காற்று மாசுபட்டு தொடர்புடைய பதிவுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இப்புகாரை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வந்தது. விசாரணைக்குப் பிறகு பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் வடசென்னை பகுதிகளில் மாசு ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மூத்த அதிகாரி, மத்திய மாசு கட்டுப்பாட்டு மூத்த அதிகாரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மூத்த அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் ஆகியோர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழு காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, பிப்ரவரி 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.