16ம் வருடம் சுனாமி நினைவு தினமான இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் இந்தியப் பெருங்கடலில் ஒரு சுனாமி உருவானது. இந்த ஆழிப்பேரலை இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் கோரத் தாண்டவமாடி விட்டு சென்றது. இந்தோனேஷியா மற்றும் இந்தியா மட்டுமல்லாமல் மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கி அங்கிருந்த மக்களை தனக்கு இரையாக்கிக் கொண்டு சென்றது சுனாமி. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.
சுனாமியால் சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகள் பெரும் சேதங்களை சந்தித்தன. இந்த ஆழிப்பேரலைக்கு தமிழகத்தில் மட்டுமே ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இரையாகினார். இதையடுத்து இன்று சுனாமியின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் சொந்தங்களை சுனாமியால் இழந்த மக்கள் கடற்கரைக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடலில் பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
மேலும் நாகை, கடலூர், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி முதல்குளச்சல் வரை உள்ள மீனவர்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். மணக்குடி கிராமத்தில் 117 பேர் பலியானதால் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து மக்கள் அடக்கம் செய்யப்பட்டவர்களின் நினைவு ஸ்தூபியில் மெழுகுவத்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.