8 மாத கர்ப்பிணி பெண் கனவருடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலமுருகன் என்பவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள மீனாட்சி நகரில் வசித்து பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 1/2 வருடத்திற்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கவிதா என்பவருடன் பெற்றோர்கள் முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக கவிதா இருந்துள்ளார்.
பாலமுருகனின் சகோதரன் கார்த்திகேயன் நேற்று முன்தினம் பாலமுருகனை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த சகோதரன் கார்த்திகேயன் பாலமுருகன் வீட்டிற்கு நேற்று காலை சென்று பார்த்தார். அங்கு கதவு சாத்தப்பட்டிருந்தது. பின்பு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பாலமுருகன் கவிதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் பாலமுருகன் கவிதா இருவரும் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. அதில், “தங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை” என்று எழுதப்பட்டிருப்பதாக போலீசார் கூறினர்.
இச்சம்பவம் குறித்து கவிதாவின் தந்தை சண்முகம் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது. 8 மாத கர்ப்பிணி தன் கணவருடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.