நடிகர் ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டிஸ்சார்ஜ் செய்வது பற்றி மாலை தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அங்கு அனுமதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் நடிகர் ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஜினிக்கு முழு ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாரும் அனுமதிப்பதில்லை. பரிசோதனை முடிவுகள் மற்றும் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.