அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு பிரகதீஸ்வரன் என்ற மகன் உள்ளான். பிரகதீஸ்வரன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகதீஸ்வரன் தனது தந்தையுடன் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் பிரகதீஸ்வரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரகதீஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.