அனைத்து வாகனங்களுக்கும், வரும் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த, வாகனங்கள், நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக ஃபாஸ்டேக் அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின்படி, ஃபாஸ்டேக் அட்டையில் முன்கூட்டியே பணம் செலுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தின் முன்பகுதி கண்ணாடியில் ஃபாஸ்டேக் அட்டையை ஒட்டிக்கொண்டால், அந்த வாகனம் சுங்கச்சாவடியை கடக்கும் போது அங்கு பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கருவி, ஃபாஸ்டேக் அட்டையில் இருந்து கட்டணத்தை எடுத்துக் கொள்ளும். அட்டையில் தொகை குறையும் போது ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருக்காமல் வாகனங்கள் விரைவாக செல்ல முடியும். ஃபாஸ்டேக் அட்டை தற்போது நடைமுறையில் உள்ள போதும், அனைத்து வாகனங்களுக்கும், கட்டாயம் ஆக்கப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் திரு.நிதின் கட்கரி, வரும் ஒன்றாம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் அட்டை பொருத்துவது கட்டாயம் எனத் தெரிவித்தார்.