புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பது குறித்து, விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும்வரை, போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
கடந்த 21-ம் தேதி முதல் சுழற்சி முறையில் உண்ணாவிரதமும் மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம், 31-வது நாளாக தொடரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பற்றி விவசாயிகள் தங்களுக்குள் விவாதித்தனர். அதில் சில விவசாய அமைப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர தீர்மானித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தை ஒரு தீர்வை கொடுக்கலாம் என்று அவர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் இன்று ஆலோசனை நடத்துகின்றன.