தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்போடுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் செந்தட்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கணபதி(36) – காயத்ரி. இவர்களுக்கு கமலேஷ் மற்றும் குஷிகா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் சில தினங்களாக காய்ச்சல் இருந்ததால் சம்பவத்தன்று இருவரையும் கணபதி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தன்னுடைய மனைவி காயத்ரியை வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் மருந்து வாங்கிக் கொண்டும், சாப்பிடுவதற்காக சாப்பாடு வாங்கிக்கொண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள பெரியாதிகுளம் சாலையில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்தில் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கணபதி, மகன், மகள் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதில் கணபதி மற்றும் அவரின் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் தலையில் பலத்த காயங்களுடன் கமலேஷ் உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட கமலேஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரான கண்ணன் என்பவரை கைது செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.