ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் சதீஷ்குமார். சதீஷ்குமார் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வள்ளலார் நகரைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் என்பவருடன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார் . இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கி உள்ளனர். இதையடுத்து இருவரும் காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர்.
இதை பார்த்தவர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் மீட்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய இரண்டு பேரையும் ஏரியில் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் சதீஷ்குமாரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ஆனால் வெகு நேரமாக தேடியும் சதீஷின் உடல் கிடைக்கவில்லை . இரவு நீண்டநேரம் ஆனதால் வெளிச்சமின்மை காரணமாகவும் ஏரியில் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் தீயணைப்புத் துறையினரால் சதீஷ் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளை மீண்டும் சதீஷின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.