ரேஷன் கடை ஊழியர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவகுமார் – மகேஸ்வரி. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவகுமார் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிராம்பட்டினம் ரேஷன் கடை முன்பு சிவகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் சிவகுமாரை சரமாரியாக கைகளால் தாக்கினர்.
இதில் சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகுமாரின் மனைவி மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.