இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு பொருளாதாரம் மிகவும் சரிவடைந்ததால், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்றும், 2030ஆம் ஆண்டு இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் 2021 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும். இந்தியாவில் வளர்ச்சி விகிதம் மிகவும் மெதுவாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடாக திகழும் என்று குறிப்பிட்டுள்ளது.