இறந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி அடக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பெரியதச்சூரில் வராக ஆற்றின் கரையோரம் நேற்று காலை மயில் ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அதனை நேரில் பார்வையிட்ட பெரியதச்சூர் வி.ஏ.ஓ லோகநாதன் மற்றும் கால்நடை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் அம்மயிலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின் விவசாய நிலத்தில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்து கலந்த உணவை உண்டு மயங்கி இருந்த நிலையில் அம்மயில் நாய் கடித்து இறந்தது தெரியவந்தது.
அதனை அடுத்து மயிலை விழுப்புரம் வனகாப்பாளர் கதிர்வேல் மற்றும் வனத்துறை வனவர் ஜெயபால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மேலும் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் மயில் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டு பின் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.