கியாஸ் சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டம்(70). வைகுண்டம் அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகததால் வீட்டில் இவரே சமையல் செய்து சாப்பிட்டு வந்தார். ஏஜென்சியில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்காக திருவேங்கடம் பகுதியை சேர்ந்த பசுபதி பாண்டியன் மற்றும் நெல்லையை சேர்ந்த காளி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழுதடைந்த சிலிண்டரை பசுபதி பாண்டியனும் காளியும் சேர்ந்து லோடு ஆட்டோ மூலம் வைகுண்டத்தின் வீட்டிற்கு எடுத்து வந்தனர்.
வீட்டில் வைகுண்டம் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டிலிருந்த மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர். படுகாயமடைந்த மூவரும் மீட்க்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் சிலிண்டர் வெடித்து சிதறிய காட்சிகள் அருகில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வைகுண்டம் மற்றும் காளி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பசுபதி பாண்டியனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.