மர்ம நபர் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்போர்ட் என்ற பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று இரவில் திடீரென புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இக்கொடூர தாக்குதலில் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று இளைஞர்கள் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விவேகமாக செயல்பட்டு அந்த மர்ம நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒருவர் மட்டும் தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கு எந்தவித நோக்கமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின்போது அந்த மையத்தில் இருந்த பல இளைஞர்கள் பதறி ஓடியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விளையாட்டு மையம் 1959 ஆம் வருடத்திலிருந்து செயல்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மைதானத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.