கருவில் உள்ள குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்களால் விலங்குகள், மண் வளங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கடல் வாழ் உயிரினங்களும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி உயிர் இழந்து விடுகின்றன. இதேபோல வனவிலங்குகளும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்து தப்பவில்லை.
இந்நிலையில் பிறக்காத தாயின் கருவில் உள்ள குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கருவறையில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிசன் கொடுத்து, குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ஒரு உறுப்பாக நஞ்சுக்கொடி உள்ளது. இந்த நஞ்சுக்கொடியில் நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நஞ்சுக்கொடி வரை பிளாஸ்டிக் பொருட்கள் சென்றுள்ளது மிக மிகத் தீவிரமான பிரச்சினை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நஞ்சுக்கொடியிலுள்ள இந்த பிளாஸ்டிக் கருவிலுள்ள குழந்தையின் உடலுக்குள் அல்லது தாயின் உடலுக்குள் நுழையலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பிளாஸ்டிக் கருவில் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வாழ்க்கை முறை, தாயின் உணவுமுறை ஆகியவற்றின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.