ராஜ விதியை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் அனைவரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தான். மாமன்னன் ராஜேந்திர சோழன் மாளிகைமேட்டில் உள்ள தனது அரண்மனையில் இருந்து பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் ஒரு கணக்க விநாயகர் கோவிலை கட்டி வழிபட்டுள்ளார். மன்னன் முதலில் விநாயகரை வழிபட்ட பின்னரே ராஜவீதி வழியாக பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜவீதியை பலர் ஆக்கிரமித்தனர். இதனால் மாளிகை மேடு பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையான ராஜ வீதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது அப்பாதையே தென்படாத வண்ணம் உள்ளது. இதனால் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராஜவீதி வழியாக சென்று விநாயகரை தரிசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேஷ் லக்கானி சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் கலெக்டருக்கு அச்சமயத்தில் ஏற்பட்ட பணி மாறுதல் காரணமாக ராஜ வீதியை சீரமைக்கும் பணி பாதியிலேயே நின்றுவிட்டது. இந்நிலையில் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் அனைவரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் ராஜவீதியை காணவில்லை என்றும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பாதையை சீர்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.