நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர் . லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர் . கொரோனா பரவல் காரணமாக எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . இந்நிலையில் மாஸ்டர் பட ரிலீஸ் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று நடிகர் விஜய் சந்தித்ததாக செய்திகள் வெளியானது.
அதில் திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் இந்த தகவலை அறிவித்துள்ளார். மேலும் அவர் கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் மிகப் பெரிய படம் இது. இந்த படம் தயாராகி 10 மாதங்களாகியும் ஒடிடியில் வெளியிடாமல் இருந்த நடிகர் விஜய்க்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் .