வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், கடும் குளிரிலும், பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் 33வது நாளாக தொடர்கிறது.
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியது. ‘குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும்’ என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்’ என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, ஆறாவது சுற்று பேச்சு, நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், டில்லி எல்லையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. கடும் குளிரிலும், சிங்கு, காஜிபுர், டிக்ரி எல்லைகளில், விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
மேலும் கொரோனாவை விரட்ட பிரதமர் ஒலி எழுப்ப சொன்னதுபோல, வேளாண் சட்டங்களை விரட்டியடிக்க ஒலி எழுப்புகிறோம் என பிரதமரின் மன்-கி-பாத் உரையின்போது, தட்டுகளை அடித்து ஒலி எழுப்பிய விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர்.